இருசக்கர வாகனங்களை திருடி உருமாற்றி, ஆன்லைன் மூலம் விற்பனை செய்த பலே திருடன்! போலீசாரின் அதிரடி வேட்டை!



police arrest bike theft

தமிழகத்தில் சமீபகாலமாகவே இருசக்கர வாகனங்கள் திருடுபோவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுக்க போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில், சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர், அவரது இருச்சக்கரவாகனத்தை வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்துள்ளார்.

ஆனால் அவர் பைக் நிறுத்திய அந்த இடத்தில், அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அப்பகுதியில், போலீசார் மாற்று உடையில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

arrest

இந்நிலையில் நேற்று காலை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு எதிரில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருட முயற்சிப்பதை போலீசார் கவனித்தனர், இதனையடுத்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பைக்குகளைத் திருடியவர் பெயர் ரமேஷ் என்பதும், அவர் சென்னையில் பல பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரமேஷ் வழக்கமாக திருடும் இருசக்கர வாகனங்களை உருமாற்றி ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 12 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.