வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை..!
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து காவல் துறை மீது துறை ரீதியிலான மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த 26-ஆம் தேதி முதல் சென்னையில் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தம் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவலர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை வசூலிக்கும் போது, பல இடங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளிடம் சில காவலர்கள் அபராத தொகையுடன் சேர்ந்து லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.
சமீபத்தில் குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபரிடம், சென்னையை சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, லஞ்சமாக ரூ.5 ஆயிரம் தராவிட்டால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாக அந்த வாலிபரை மிரட்டியுள்ளார். மேலும் முதற்கட்டமாக ஆயிரம் ரூபாயை வாலிபரிடம் பெற்றதுடன், மீதி ரூ.4 ஆயிரத்தை விரைவில் கொடுத்துவிட வேண்டும் என்றும், கொடுக்கவில்லை என்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட வாலிபர் இது குறித்த வீடியோ ஆதாரத்துடன் உயர் அதிகாரியிடம் புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்சம் வாங்கிய போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
லஞ்சம் மற்றும் பணம் கையாடல் போன்ற முறைகேடுகள் செய்யும் போக்குவரத்து காவலர்கள் மீது துறை ரீதியிலான மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
150 காவலர்களுக்கு இ- சலான் கருவிகளை பயன்படுத்துவது குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சம் வாங்குவது, பணம் கையாடல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது, என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, எனவே இதுபோன்ற முறைகேடுகளை செய்பவர்கள் மீது துறை ரீதியிலான மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, பொதுமக்களிடம் மற்றும் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மேலும் வழக்கு பதிவு செய்யும் போது கேமரா பயன்படுத்த வேண்டும் என்றார்.