சம்பளமில்லாமல் வேலை பார்க்க நான் தயார், இனி ஒரு வழக்குகளையும் விடமாட்டேன்! பொன்.மாணிக்கவேல் அதிரடி!
இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த தமிழகத்தின் சிலை மீட்பு நாயகன் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதவி நீட்டிப்பு செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், இதற்கு முன்னர் இருந்ததை விட தற்போது அதிக வீரியத்துடனும், நம்பிக்கையுடனும் அளித்த வார்த்தைகளை தான் இப்போதும் கூறுகிறேன். கூடுதல் பொறுப்பை எந்த அளவுக்கு திறம்பட செய்ய முடியுமோ அந்த அளவிற்கு செய்வேன்.
இப்போது என்னுடன் இருக்கும் என்னுடைய டீம் அப்படியே இருக்கும். எனது குழுவில் யாருக்கேனும் சிறிய தொந்தரவு வந்தால் கூட விட மாட்டேன். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடாமல், முழுக்க முழுக்க பொறுப்பு எடுத்துக் கொண்டு செயல்படுவேன்.
மக்களுக்காக நான் உழைக்க இருக்கிறேன். இப்படிப்பட்ட கடமையை செய்ய நான் சம்பளம் கூட வாங்காமல் வேலை பார்ப்பேன். தமிழகத்திலுள்ள கொலை வழக்குகளை கூட நான் சம்பளம் இல்லாமல் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறேன் எனக் கூறினார்.
இனி சிலைத் திருடர்களை மொத்தமாக பிடிப்பதுதான் என்னுடைய முதல் வேலையே. இந்த வழக்கை முழுமையாக முடிக்காமல் விடமாட்டேன், முடித்தே தீருவேன். சென்னை உயர் நீதிமன்றம் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. நீதிமன்றம் எடுத்த முயற்சியால்தான் இந்த பணி நீட்டிப்பு சாத்தியமானது. முன்பை விட நான் வேகமாக வேலை செய்வேன் எனக் கூறியுள்ளார்.