தன்னந்தனியாக வெளிநாட்டில் தவித்துவந்த 8 மாத கர்ப்பிணி பெண்! தீவிர முயற்சியால் ஊருக்கு மீட்டுவந்த கனிமொழி எம்.பி!



Pregnant girl rescue for ireland

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாழை கிராமத்தை சேர்ந்தவர் டீனு. இவர் அயர்லாந்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஊருக்கு விடுமுறைக்கு வந்தபோது அவருக்கு ரொசில்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து டீனு உடனே அயர்லாந்துக்கு பணிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர் தன்னுடன் தனது கணவர் ரொசில்டனையும் சுற்றுலா விசாவில் அயர்லாந்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ரொசில்டனுக்கு பணி கிடைக்காததால், விசா காலம் முடிந்ததாலும் கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் தூத்துக்குடி திரும்பினார். அதனை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த டீனு தனியாக தங்கி அயர்லாந்தில் பணியாற்றி வந்தார். மேலும் பேறுகாலத்திற்காக தமிழகம் திரும்ப ஏப்ரல் மாதம் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் தற்போது கொரொனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில்  அயர்லாந்தில் கவனித்துக்கொள்ள ஆட்களின்றி 8 மாத கர்ப்பிணியாக டீனு தவித்து வந்துள்ளார். 

ireland

 இந்நிலையில் டீனுவின் பெற்றோர்  தனது கர்ப்பிணி மகள் குறித்த முழு விவரங்களையும் ஒரு கடிதத்தில் எழுத, அவரை ஊருக்கு மீட்டுத்தருமாறு கூறி கனிமொழி எம்பியிடம் கொடுத்துள்ளார்.
அதனை பார்த்த கனிமொழி எம்.பி உடனடியாக டீனுவை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்து டீனுவை மீட்பதற்காக தீவிரம் காட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து டீனுவை மீட்பு விமானத்தில் அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து டீனு அயர்லாந்தில் இருந்து லண்டனுக்கு கார் மூலம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சிறப்பு மீட்பு விமானத்தில் மும்பை வந்துள்ளார். அதனை தொடர்ந்து மும்பையிலிருந்து மற்றொரு விமானத்தில் சென்னை வந்து அங்கிருந்து  கார் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்ற டீனு, உணர்ச்சிபொங்க நன்றி தெரிவித்துள்ளார்.