ஆன்லைன் கேமுக்கு கடன் வாங்கி விளையாட்டு.. கழுத்தை நெரித்த கடனால் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.!



Ranipet Arcot Youngster Suicide Loan Issue Money Debt Online Game

கடனுக்கு பணம் வாங்கி ஆன்லைனில் கேம் விளையாடி வந்த இளைஞர், கடன் தொல்லை கழுத்தை நெரித்த காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, தென்கழனி கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ராமமூர்த்தியின் மனைவி பச்சையம்மாள். இந்த தம்பதியின் மகன் விக்னேஷ் (வயது 23). இவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் பப்ஜி உட்பட விளையாட்டுகளில் அதிக பணம் செலவு செய்து கேம் விளையாடி இருக்கிறார். பணப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தனக்கு தெரிந்தவர்களிடம் கடனும் பெற்றுள்ளார். 

Ranipet

கடனை கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்கவே, விரைவில் தந்துவிடுவதாக தட்டிக்கழித்து இருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் விக்னேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் மகனை கண்டிக்கவே, மனமுடைந்த விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இன்று காலை நேரத்தில் பெற்றோர் மகனின் அறைக்கு வந்து பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.