இவர்கள் இணைந்தால் மட்டுமே தி.மு.க.வை வெல்ல முடியும்.! பொறுப்பில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ.!



Rathinasababathi resign post from admk

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினசபாபதி  புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

 அ.ம.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்தால் மட்டுமே தி.மு.க.வை வெல்ல முடியும். அ.தி.மு.க. தற்போது பின் நோக்கி சென்று கொண்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க. விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.

admk mla

வரும் சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜ நாயகத்துக்கு ஆதரவாக ரத்தினசபாபதி தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த 23-ம் தேதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பதவியை ரத்தினசபாபதி அவர்களுக்கு தலைமை கொடுத்திருந்தது. இந்தநிலையில், இவர்களோடு பயணிக்க முடியாத காரணத்தால் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். 

ஆனால் நான் அ.தி.மு.க.வை விட்டு விலகவில்லை. தொண்டனாகவே தற்போது இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவராக நியமனம் செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட கழக அவைத்தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயல்பட முடியாத சூழ்நிலையில் நீங்கள் அறிவித்த அந்த பதவியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.