2 ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யும் வரை யாரும் சாப்பிட மாட்டோம்.. வீட்டிற்கு போக மாட்டோம்..! மாணவர்களின் தீவிர போராட்டம்.!



school-students-protest

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவரின் மகன் நிதிஷ்குமார். இவர் பாப்பான்விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவன் நிதிஷ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவனை நேரடியாக வீட்டில் கொண்டு ஆசிரியர் ஒருவர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து நிதிஷ்குமாரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.
 
இதைத்தொடர்ந்து நிதிஷ் குமாரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வருகிற வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக நிதிஷ்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

school students

இதனையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார். இந்தநிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பள்ளி மாணவர்கள் கூறுகையில், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்கள் மீது அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களை எந்தவொரு விசாரணையும் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்ததை கண்டிக்கிறோம். உடனடியாக அவர்களது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் பள்ளிக்கு வரும்வரை நாங்கள் சாப்பிடமாட்டோம், வீட்டிற்கு போகமாட்டோம் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.