செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு.! வெள்ள அபாய எச்சரிக்கை.! பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!



semparampakkam lake water level increased

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் நேற்று காலையில் இருந்து தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

sembarampakkam

இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோட்டூர்புரம், அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.