இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பா அப்பாடா! ஆனால் உள்தமிழகத்தின் நிலை பரிதாபம்தா; வானிலை மையம் தகவல்.!
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் தற்போது இம்மாத தொடக்கத்திலேயே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் புதிதாக வெளியான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி: குமரிக்கடலில் இருந்து தமிழகம் வழியாக உள் கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால், உள்தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 தமிழக உள்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.