உடற்கூறு ஆய்வில் கூறப்பட்ட தகவலால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்... ஆத்திரத்தில் பள்ளியை அடித்து நொரிக்கிய வெறித்தனம்...!



students-who-were-shocked-by-the-information-given-in-t

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மாணவி ஸ்ரீமதி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்ரீமதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அவரது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்துபோராட்டம் நடத்தினர். இதனால் சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்ற மாணவர்களை தடுக்க காவல்துறையினர் முயற்சி செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையினர் பலர் காயமடைந்தனர். காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். 

இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். ஒரு கட்டத்தில் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பொருட்களை அடித்து நொறுக்கினர். 

இதனால் காவல்துறையினரும் கற்களை வீசி போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர். இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.