சட்டசபை புதிய சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு.! யார் இந்த அப்பாவு.?



Tamil Nadu Assembly New Speaker Appavu

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்முதல்வராக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்தநிலையில்,தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வாகியுள்ளார். 

அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் தேர்வாகினார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மதியம் 12 மணியுடன் முடிந்ததால் 2 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

சபாநாயகர் அப்பாவு, 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.

இதனையடுத்து 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இதனையடுத்து 2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு மீண்டும் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.