தமிழக அரசின் நிதியுதவி ரூ.2000 பெறுபவர்களின் பட்டியல் தயார்; வருவாய் துறை அதிரடி நடவடிக்கை.!
தமிழக முதல்வர் அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி பெறுபவர்களின் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் துறை தெரிவித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ரூ.2,000 உதவித்தொகை வழங்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் சிறப்புதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த ரூபாய் 2000 ஆனது இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம் பயனாளர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் உள்ளாட்சித் துறையில் தயார் நிலையில் இருப்பதாகவும் அதில் இருப்பவர்களுக்கு ரூபாய் 2000 ஆனது அவர்களது வங்கி கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது.