டீக்கடையை தீக்கடை ஆக்கிய வடைச்சட்டி.. கியாஸ் கசிவை கவனிக்காததால் டமால்., டுமீல்.!



Tea Shop Fired in Nagarcoil

வடை போடும் போது கியாஸ் தீர்ந்துவிட்ட நிலையில், அதனை மீண்டும் பற்றவைத்த போது டீக்கடை தீக்கடை ஆனது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருவிளையில் வசித்து வருபவர் ஷபீக். இவர் பார்வதிபுரம் மேம்பாலம் கீழ் பகுதியில் தேநீர் கடை வைத்து நடத்தி வருகிறார். இக்கடை 24 மணிநேரமும் செயல்படும் கடையாகும். கடையில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மூஸா (வயது 48) என்பவர், காலையில் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது சிலிண்டர் காலியாகவே, புதிய சிலிண்டரை மாற்றியுள்ளார். 

அதனைத்தொடர்ந்து, புதிய சிலிண்டரை மாற்றிவிட்டு கியாஸை பற்றவைக்கவே, அது திடீரென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. அவர் சுதாரிப்பதற்குள் எண்ணெய் பாத்திரத்திலும் தீ பற்றி, டீ கடை தீ கடையாகி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. உயிரை கையில் பிடித்தவாறு மூஸா வெளியேற, தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்த அதிகாரிகள் மின்நிலையத்திற்கு தகவலை தெரியப்படுத்தி மின்சாரத்தை துண்டித்த நிலையில், சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கடையில் தீப்பற்றி எரிவதை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மற்றும் கடை ஊழியர்கள் மூஸா, பிரவீன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.