ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஓகே சொன்ன திமுக கூட்டணி கட்சிகள்.!



The Sterlite plant can only be opened for oxygen production

நாட்டின் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசே ஆலையை ஏன் ஏற்று நடத்தக் கூடாது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் உற்பத்தியை தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.