மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூட்டுக்கு சொந்தக்காரரிடமே மாற்று சாவி செய்ய ஆர்டர் கொடுத்த திருடன்: தர்ம அடி வாங்கிய ருசிகரம்..!
சேலம் மாவட்டம், கோட்டை பகுதியை சேர்ந்தவர் உசேன். இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு மாற்று சாவி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளுக்கு சாவி பழுதாகிவிட்டது என்றும், அதற்கு புது சாவி செய்து கொடுக்க வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிளின் உரிமையாளரும், மாற்று சாவி செய்து கொடுப்பவருமான உசேனிடம் வந்து கூறியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை பார்த்த உசேன் திடுக்கிட்டார்.
திருட்டு போன தனது மோட்டார் சைக்கிளுக்கு, தன்னிடமே சாவி செய்து கொடுக்கும் படி கேட்டு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளதை கண்டு உசேன் சுதாரித்தார். உடனே அவர் அந்த நபரை காத்திருக்குமாறு கூறிவிட்டு பக்கத்து கடைக்காரர்களிடம் பேசுவது போன்று மர்ம நபர் குறித்த விவரத்தை கூறி உள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் வாலிபரை மடக்கி பிடித்து சேலம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் கருப்பூர் அருகே உள்ள செங்கரடு பகுதியை சேர்ந்த மோகன் (28) என்பதும், பொறியியல் பட்டதாரியான இவர் வேலையில்லாமல் இருப்பதையும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மோகனை கைது செய்த காவல்துறையினர், வேறு எந்தெந்த இடத்தில் திருடியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடிய மோட்டார் சைக்கிளுக்கு சாவி செய்ய சென்ற போது அதன் உரிமையாளரிடமே திருடன் சிக்கிய ருசிகர சம்பவம் நேற்று சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது