சாலை இல்லாத கிராமம்.! கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி தூக்கிவந்த கிராம மக்கள்.! ஆட்டோவில் பிறந்த ஆண் குழந்தை.!



The woman gave birth to a baby in the auto

வேலூர் மாவட்டம், ஊசூர் அருகே உள்ள குருமாலை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி பவுனு. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது 3-வது முறையாக பவுனு கர்ப்பமாக இருந்துள்ளார்.  இந்தநிலையில் நேற்று திடீரென பவுனுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மலை கிராமத்திற்கு போதுமான வாகன வசதி இல்லாததாலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழலும் இருப்பதால் கிராம மக்கள் பவுனை டோலி கட்டி தூக்கி வந்துள்ளனர். குருமலை கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி இல்லை. மலை மீது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் இல்லை. இதனால் மக்கள் பிரசவம் உள்ளிட்ட  பல சிகிச்சைக்காக டோலிகட்டி தூக்கி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், பவுனை கிராம மக்கள் டோலி கட்டி மலையடிவாரம் வரை தூக்கி வந்துள்ளனர். பின்னர் மலையடிவாரத்தில் இருந்து ஆட்டோவில் அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவிலேயே பவுனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இருவரும் சிகிச்சைக்காக ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.