#BigBreaking: அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை பலி; மேலாளர் உட்பட 3 பேர் கைது...!
தனியார் தோட்டத்தில் சிறுத்தை பலியான விவகாரத்தில், அதிமுக எம்.பியின் தோட்ட மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்கம்கோம்பை கிராமத்தில் இருக்கும் தனியார் சோலார் பவர் மின்கம்பியில் சிறுத்தை சிக்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனத்துறை அதிகாரிகளை தாக்கிய சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், அதே சிறுத்தை அக்.28 ம் தேதி தனியார் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய தேனி வனச்சரக அலுவலர், சம்பந்தப்பட்ட தோட்டம் தேனி மக்களவை தொகுதியின் உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்தனர். அந்த தோட்டத்தில் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ஆடு வளர்த்து வந்துள்ளார்.
அவரின் மீது வழக்குப்பதிந்து அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர், தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் போன்ற நிர்வாகிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி தொழிலாளர் மட்டுமே இவ்வழக்கில் இரையாக்கப்பட்டுள்ளார் என கூறினர். இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் தோட்டத்தின் மேலாளர் தங்கவேல் (வயது 42), ராஜவேல் (வயது 28) ஆகியோரை கைது செய்தனர்.