மனஉளைச்சலால் மது குடித்து மதியிழந்த அண்ணன்.. தம்பியை கோடரியால் வெட்டி கொன்ற பயங்கரம்.!
தம்பியை அழைக்காமல் அண்ணன் வேலைக்கு சென்ற தகராறில், தம்பியின் செயலால் மனம்நொந்த அண்ணன் உடன்பிறந்த சகோதரனை படுகொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, கெட்னமல்லி கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகன்கள் முனுசாமி (வயது 45), சுப்பிரமணி (வயது 43), முத்து (வயது 38), சுரேஷ் (வயது 32). இவர்களில் சுரேஷுக்கு திருமணம் ஆகவில்லை. சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்த நிலையில், கணவன் - மனைவி பிரச்சனையால் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சுரேஷ் தனது தாயார் தனலட்சுமியுடன் வசித்து வந்த நிலையில், சுரேஷும் - அவரின் அண்ணன் சுப்பிரமணியும் கட்டிட தொழிலாளராக இருந்து வந்ததால், இருவரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினத்தில் சுப்பிரமனை தனது தம்பி சுரேஷை வேலைக்கு அழைக்காமல், வேறு சிலரை அழைத்து சென்றுள்ளார்.
அன்றைய இரவில், தாயார் தனலட்சுமி தனது மகன்கள் இருவருக்கும் உணவளித்துக்கொண்டு இருந்த நிலையில், சாப்பிடும் போது என்னை எதற்காக வேலைக்கு அழைத்து செல்லவில்லை என அண்ணனிடம் சுரேஷ் வினவியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சம்பவம் நடந்துள்ளது. ஆத்திரத்தில் சுரேஷ் தனது அண்ணனின் சாப்பாடை தட்டிவிட்டு இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி சாப்பிடாமல் வீட்டில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த சுப்பிரமணிக்கு, தம்பியின் செயல் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தம்பியின் மீது உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்து வந்த சுப்பிரமணி, இரவு மதுபானம் அருந்தி வீட்டிற்கு வந்து, உறங்கிக்கொண்டு இருந்த தம்பியை கோடரியால் வெட்டியுள்ளார்.
தலையில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் மிதந்த சுரேஷ் மயக்கமடையவே, தாயாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கவரைப்பேட்டை காவல் துறையினர் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.