சென்னையில் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணம் திருடிய 3 பெண்கள்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த பார்வதி என்ற 58 வயது நிரம்பிய பெண் மீஞ்சூரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக கடந்த 19-ம் தேதி அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது, பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் பார்வதியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர் பார்வதி மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவர்கள் மூவரும் பார்வதியின் பையை எடுத்துக் கொடுத்ததுடன், கவனமாகச் செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.
பேருந்தில் இருந்து கீழே இறங்கி சிறிது நேரத்துக்குப் பிறகுதான், தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்ததை பார்வதி அறிந்தார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதேபோல, சூளை சுப்பாநாயுடு தெருவைச் சேர்ந்த காமாட்சியம்மாள்(70), மாதவரத்தில் ஆட்டோவில் சென்ற, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவி ஜெயலட்சுமி ஆகியோரது நகைகளும் திருடப்பட்டன.
குறிப்பாக, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம் பகுதிகளில் அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, ஒரு கும்பல் நகைகளை திருடிவந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த கும்பலை பிடிக்க வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், இதில் சில பெண்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அந்த பெண்கள் ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்தில் தனியாக வரும் பெண்கள், மூதாட்டிகளிடம் கனிவாக பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தை நூதன முறையில் திருடி செல்வது தெரியவந்தது. இந்த நிலையில், திருட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும் சந்தேகத்துக்கிடமான 3 பெண்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சாந்தி (வயது 35), கவுரி (41), சின்னத்தாய் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை சென்னை வந்திறங்கியதும், வடசென்னை பகுதி மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகளில் செல்லும் பெண்களிடம் கவனத்தை திசைதிருப்பி நூதன முறையில் நகை, பணம் திருடி சென்றுள்ளனர். நகையை திருடிய உடன் அன்று மாலையே சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று விடுவதையும், மீண்டும் மறுவாரம் இதுபோல் சென்னை வந்து திருடிச்செல்வதை வழக்கமாக வைத்திருந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து 14 பவுன் நகைகளை பறிமுதல் செய்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.