டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரம் ஏழை குடும்பத்தின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளல் காலமானார்.! டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்.!



thulasi ayya vandayar passed away

டெல்டா மாவட்டங்களில் மிக பெரிய குடும்பமாக இருப்பது பூண்டி வாண்டையார் குடும்பம். கல்வி வள்ளலாகவும் திகழும் துளசி அய்யா வாண்டையார், காந்தியின் தீவிர சீடராக உள்ளார். இந்த நிலையில் துளசி அய்யா வாண்டையார் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரின் மகன் வழிப் பேரன் ராமநாதனுக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் துளசி அய்யா வாண்டையார் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் திரு.கே.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். 

பழம்பெருமையும்,பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம் கொண்டவர். ‘ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய திரு.துளசி அய்யா அவர்கள் அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். 

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம்,கல்வி,சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். அன்னாரது மறைவால் வாடும் அன்புக்குரிய திரு.டி.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.