சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து, மனைவியை கொன்று புதைத்த இராணுவ வீரர்.. பரபரப்பு வாக்குமூலம்.!



Tirunelveli Thirukkurungudi Army Man Killed Inter Caste Love Married Wife

இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இராணுவ வீரர், 4 வருடத்தில் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து முதல் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், இரண்டாவது மனைவி பிரிந்து சென்றதால் முதல் காதல் மனைவியை தீர்த்துக்கட்டிய சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி, வடக்கு ரத வீதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 30). இவர் அசாம் மாநிலத்தில் இராணுவ வீரராக பணியாற்றுகிறார். இதே தெருவில் வசித்து வந்த பெண்மணி பிரேமா (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரேமா கணவரை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதியன்று மனைவி பிரேமாவை சமாதானம் செய்த மாரியப்பன், சொந்த ஊரான திருக்குறுங்குடிக்கு அழைத்து வந்துள்ளார். 

அன்றைய நாளின் இரவிலேயே பிரேமாவை கழுத்தை நெரித்து கொன்ற மாரியப்பன், பெரியகுளத்தில் மனைவியின் சடலத்தை புதைத்துள்ளார். பிரேமா மாயமானது தொடர்பாக திருக்குறுங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையின் போது, மாரியப்பன் கொலை செய்தது அம்பலமானது. 

tirunelveli

இதனையடுத்து, மாரியப்பனை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், "நாங்கள் இருவரும் வேறுவேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இதனால் எங்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டோம். 

திருமணத்திற்கு பின்னர் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய நிலையில், எங்களுக்கு 4 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2020 ஆம் வருடம் முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். நான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2021 ஆம் வருடம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். 

இரண்டாவது திருமணம் முடித்துக்கொண்டாலும், முதல் மனைவி பிரேமாவுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி இருந்தேன். இந்த விஷயம் இரண்டாவது மனைவிக்கு தெரியவந்து, அவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். என்னிடம் குடும்பம் நடந்த செலவுக்கு பணம் வேண்டும் என பிரேமா தொந்தரவு செய்தார். இதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்தேன். 

tirunelveli

கடந்த 9 ஆம் தேதி சென்னையில் இருந்த பிரேமாவிடம் பேச்சுக்கொடுத்து திருக்குறுங்குடிக்கு வந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு பெரியகுளத்திற்கு சென்றேன். அங்கு பிரேமாவின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்து, குளத்தில் குழிதோண்டி அவரின் உடலை புதைத்து வீட்டிற்கு வந்தேன். நான் பிரேமாவை அழைத்து வந்த தகவல் அவரின் உறவினருக்கு தெரியவந்தது. 

இதனால் அவர் எங்கே? என கேட்ட நிலையில், நான் கூறிய முரணான பதிலால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நான் எப்படியானாலும் தப்பித்துவிடலாம் என எண்ணியிருந்த நிலையில், காவல் துறையினர் என்னை கைது செய்துவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், மாரியப்பனை சிறையில் அடைத்தனர்.