#Breaking: சிறுபிள்ளைத்தனமாக ஆளுநர்; தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் கடும் தாக்கு.!



TN CM MK Stalin on TN Governor Activity TN Assembly 2025 

 

2025ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று முதல் தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் சட்டப்பேரவைக்கு உரையளிக்க வந்திருந்த சமயத்தில், அதிமுக & காங்கிரஸ் கட்சியினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என் ரவி அவையில் இருந்து வெளியேறினார். 

இந்த விசயத்திற்கு கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்தார். ஆளுநர் தனது மரபை மீறி செயல்பட்டதாகவும், தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது தொடர்பாக ஆளுநர் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் நடைபெற்ற தாக்குதல், போரின்போது நிதிஉதவி அளித்தது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறினார்.

இதையும் படிங்க: #Breaking: "ஆளுநர் ரவியே வெளியேறு" - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேச்சு.!

தமிழ்நாடு முதல்வர் விமர்சனம்

இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைப்பதிவில், "அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. 

தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: ஆளுநர் உரையை புறக்கணித்த விவகாரம்; துரைமுருகன் தீர்மானம் - ஒருமனதாக நிறைவேற்றம்.!