தொடர் விடுமுறை எதிரொலி.. இரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் வருகை அதிகரிப்பு.. கூடுதல் பேருந்துகள் இயக்கம்.!



TN Govt Bus Transport Limit Plan to Service Special Bus to Peoples Engagement Holiday

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகியுள்ள நிலையில், சொந்த ஊர்களில் சென்று பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி பயணம் செய்து வருகின்றனர். இதனால் தலைநகர் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், இரயில்கள், விமானங்களில் பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவாகிவிட்டன. 

இரயில்களில் பயணிகளின் பயணத்தை கருத்தில் கொண்டு முன்பதிவில்லாத இரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ள காரணத்தால், கூட்ட நெரிசலுடன் பயணிகள் தொடர்ந்து பயணம் செய்து வருகின்றனர். தென்மாவட்ட மார்க்கம் மட்டுமல்லாது, சேலம் - கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் இரயில், பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

சென்னை எழும்பூர், தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு இரயில்களில் அனைத்து வகுப்பு பெட்டிகளும் நிரம்பியுள்ள காரணத்தால், கூடுதல் சிறப்பு இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறைக்காக காத்திருந்த பலருக்கும் டிச. 25 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

chennai

இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைவரும் திட்டமிட்டுள்ள நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் தயாராகியுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூருக்கு நாளொன்றுக்கு 2,100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக இன்று மற்றும் நாளை 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

இன்றைய நாளில் 250 சிறப்பு பேருந்துகளையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து கழகம் தயார் நிலையில் இருக்கிறது. தென்மாவட்டத்திற்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் பெரும்பாலானவை முன்பதிவாகிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.