100 அடி உயர அ.தி.மு.க கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் விபரீதம்: இளைஞர் பரிதாப பலி..!!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயரமுள்ள அ.தி.மு.க கொடிக்கம்பம் இருந்தது. கடந்த வாரம் கரையை கடந்த மாண்டஸ் புயலின் காரணமாக அந்த கொடி கிழிந்து சேதம் அடைந்தது.
கிழிந்த கொடியை மாற்றுவதற்காக அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.கவினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கம்பத்தில் உள்ள ரோப் கயிற்றை இழுத்துள்ளனர். எவ்வளவு முயற்சி செய்தும் கயிற்றை இறக்க முடியாததால் கொடி கம்பத்தை இறக்கி புதிய ரோப் மற்றும் கொடியை மாற்ற முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கிரேன் இயந்திரம் மூலம் கம்பத்தை இறக்கி கொடி கம்பத்தின் ரோப்பை சரி செய்து புதிய கொடி கட்டப்பட்டு மீண்டும் கொடிக்கம்பத்தை தூக்கி நிறுத்தும் பொழுது கம்பம் தவறி விழுந்து கீழே நின்று கொண்டிருந்த அ.தி.மு.க தொண்டர் செல்லப்பன் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்லப்பனை மீட்ட சக அ.தி.மு.க தொண்டர்கள் அவரை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்லப்பன் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மதுராந்தகம் காவல்துறையினர், செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.