சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த சோகம்... ராட்சத அலையில் சிக்கிய பெங்களூர் ஐடி ஊழியர்கள்... காவல்துறை விசாரணை.!
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெங்களூரைச் சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 10 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் மதுரை போன்ற பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு செப்டம்பர் இரண்டாம் தேதி கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு தனியார் விடுதியில் தங்கிய இவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கன்னியாகுமரியில் உள்ள கோவளம் பகுதியில் அமைந்துள்ள சூரிய அஸ்தமன பூங்காவிற்கு அருகே குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீசிய ராட்சத அலையில் பிந்து (25), மணி (32) மற்றும் சுரேஷ் (35) ஆகியோர் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து உடன் வந்திருந்தவர்கள் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்களின் நீண்ட நேர தேடுதல் வேட்டையில் பிந்து என்ற பெண் மட்டும் மீட்கப்பட்டார். சுரேஷ் மற்றும் மணி ஆகியோரின் சடலங்கள் ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் சடலங்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் மீட்கப்பட்ட பெண்ணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.