மருமகளின் வழக்கை தீர்ப்பதாக கூறி, மாமியாரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்த போலி வழக்கறிஞர்.!



Trichy Manachanallur Woman Cheated by Fake Lawyer

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லுர், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி ஆனந்த் நகரில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரின் மகன் கனகராஜ் (வயது 40). கனகராஜின் மனைவி கவிமலர் (வயது 37). இவரின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி ஆகும். கனகராஜுக்கும் - கவிமலருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த சில வருடமாக தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கணவரை பிரிந்த கவிமலர் பரமக்குடியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கணவரின் வீட்டிற்கு வந்த கவிமலர், திருமணத்தின் போது தனது வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்ட வரதட்சணையை திரும்ப தரும்படி வாக்குவாதம் செய்துள்ளார். 

மேலும், இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்த நிலையில், வழக்கை முடிக்க எதிர்தரப்பான கனகராஜின் தாயார் தனலட்சுமி வழக்கறிஞரின் உதவியை நாடியுள்ளார். அப்போது, அவரது வீட்டின் அருகாமையில் வசித்து வரும் பீர்பால் என்பவரின் மகன் முகமது இஸ்மாயில் (வயது 37), நான் குளித்தலை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். 

Trichy Manachanallur

மருமகள் தொடுத்துள்ள வழக்கினை எளிய முறையில் முடித்து தருகிறேன். அவரிடம் கொடுக்கவேண்டிய நகை மற்றும் பணத்தை கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். இதனை நம்பிய தனலட்சுமியும் முகம்மதிடம் 30 சவரன் நகைகள் மற்றும் ரூ.4 இலட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். 

பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்ட முகமது இஸ்மாயில் வழக்கை தீர்த்து வைக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், தனலட்சுமி அதுகுறித்து கேட்டும் சரிவர பதில் வரவில்லை. இதனால் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், முகமது இஸ்மாயில் அரசு வழக்கறிஞர் இல்லை என்பது உறுதியானது. 

இதனையடுத்து, முகமது இஸ்மாயிலை கைது செய்த அதிகாரிகள், ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.