மேலதிகாரியின் அலட்சியத்தால் உயிரை விட்ட காவலர்; வெளியான பகீர் பின்னணி.!
தனது வயதான தாய், தந்தையரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பு மகன்களுக்கு மத்தியில் தனது உடல்நிலை சரியில்லாத தாயாரை உடனிருந்து கவனிக்க விடுப்பு தராத மேலதிகாரியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட காவலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகேவுள்ள தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45). இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் மாமதி (12) என்ற மகளும் மற்றும் சுவைமணி (9) என்ற மகனும் உள்ளனர். இவர் மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு காவலராக நீதிமன்ற வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் தன்னுடன் வசித்து வரும் தனது தாயார் சரோஜினியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் மருத்துவத்திற்காக தனது மேல் அதிகாரியை தொடர்பு கொண்டு விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவரின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமானது இதனால், வேறுவழியின்றி காவல் நிலையத்தில் ஆறு நாட்களுக்கு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விடுப்பு விண்ணப்பம் அளித்து விட்டு சென்றுள்ளார். பிறகு தனது தாயாருடன் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் பணியாற்றும் சக காவலர்களிடம் தன்னுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது அவருடைய விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் மிகவும் மனம் உடைந்த அவர் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.