ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவர்.! விரக்தியில் அறையை பூட்டிவிட்டு மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!!
கணவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் விரக்தியடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் பம்மல் பகுதியில் வசித்து வருபவர் ஞான செல்வன். 32 வயது நிறைந்த அவர் நாகல்கேணியிலுள்ள லெதர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா ப்ளோரா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஞானசெல்வன் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளார். அதில் பணத்தையும் இழந்துள்ளார். மேலும், கடன் வாங்கியும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ரம்மி விளையாடுவதை நிறுத்துமாறு, வகிதா அடிக்கடி அவரை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி வந்த அவர் அண்மையில் ரூ.1000ஐ இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விரக்தியடைந்த அவர் தன் அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கணவர் இருந்த அறையை தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஞான செல்வன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது வகிதா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.