36 மணி நேரத்தில் துருக்கியில் ஏற்பட்ட 100 நிலநடுக்கங்களின் வரைபடம்...!



100 earthquakes in Turkey in 36 hours..

கடந்த 36 மணி நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. 

நேற்று முந்தினம் அதிகாலையில் துருக்கி சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் இருக்கும் நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

இது 100 வருடங்களுக்கு பிறகு இந்த பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.

அரசு நடத்தும் ஏஜென்சியால் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை கஹ்ராமன்மாராஸ், காசியான்டெப், சன்லியுர்பா, தியர்பாகிர், அதானா, அதியமான், மாலத்யா, உஸ்மானியே, ஹடாய் மற்றும் கிலிஸ் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டியலிட்டுள்ளது. சிரியாவின் அலெப்போ, இட்லிப், ஹமா மற்றும் லதாகியா மாகாணங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 36 மணி நேரத்தில், துருக்கியில் நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதே பொதுப் பகுதியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களே பின்அதிர்வுகளாகும். 

நன்கு ரிக்டர் அளவிலான பின்அதிர்வு பொதுவாக லேசானதாகக் கருதப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றும் சுவரில் விரிசல் போன்ற சேதத்தை ஏற்படுத்த கூடும். ரிக்டர்-5 அளவில் ஏற்படும் நிலநடுக்கம், வரையறையின்படி, ரிக்டர்-4 ஐ விட பத்து மடங்கு தீவிரமானது.
மேலும் கட்டிடங்களுக்கு மிதமான சேதத்தை ஏற்படுத்தும். 

ரிக்டர்-6 அளவில் ஏற்படும் நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது. இது ரிக்டர்-4-ஐ விட 100 மடங்கு வலிமையானது. இந்த வகையான நிலநடுக்கம், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், நிறைய சேதங்களை ஏற்படுத்தும். 

துருக்கியில் கடந்த 36 மணி நேரத்தில், தென்கிழக்கு துருக்கியில் குறைந்தபட்சம் 81 எண்ணிக்கையிலான 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள், 5 ரிக்டர் நிலநடுக்கங்கள் 20 எண்ணிக்கையிலும், 6 ரிக்டர் நிலநடுக்கங்கள் மூன்று எண்ணிக்கையிலும், 7 ரிக்டர் நிலநடுக்கங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன.