அமெரிக்காவில் கோர விபத்து; விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில்... ஐந்து பேர் உயிரிழப்பு.!



A fatal accident in the United States; Five people died when the plane fell to the ground and caught fire.

அமெரிக்காவில், விமானம் ஒரு நெடுஞ்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள உலோக உற்பத்தியில் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

உலோக ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக, அர்கானாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் ஐந்து பேர் சிறிய விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு வந்தனர். 

அந்த விமானம் லிட்டில் ராக் நகரில் இருக்கும் பில் அண்ட் ஹலாரி கிளின்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது, அங்கிருந்த ஒரு நெடுஞ்சாலைக்கு மேலே சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதைதொடர்ந்து சாலையின் நடுவே விமானம் விழுந்தது. சாலையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.