இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால்.. ராணுவம் கடும் எச்சரிக்கை...!



Due to the outbreak of violence in the ongoing protest in Sri Lanka, the army is on high alert...!

இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. 

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக தீவிர மக்கள் எழுச்சி போராட்டம், கடந்த 9 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதை அடக்குவதற்காக நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மேலும் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலிருந்தும், 84 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று கொழும்புவின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. 

இதில் போராட்டக்காரர்களை அடக்குவதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் சுவாச பிரச்சினையில் 26 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையில் போராட்டக்காரர்கள் தாக்கியதில் ராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு இலங்கை ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைதியான போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பொது சொத்துகள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கான பாதுகாப்பு ஆயுதப்படைகளின் பொறுப்பின் கீழ் வருவதால், தேவைப்பட்டால் தங்கள் சக்தியைப் பயன்படுத்த படைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கப்படுகிறது.' என குறிப்பிட்டு உள்ளது. 

முன்னதாக நேற்று முன்தினம் ராணுவ வீரர்களை தாக்கிய போராட்டக்காரர்கள், அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளை எடுத்து சென்றிருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த எச்சரிக்கையை ராணுவம் விடுத்துள்ளது. மேலும் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் முதன்முறையாக விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.