100 பேரை காவு வாங்கிய திருமண நிகழ்ச்சி தீ விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி கண்ணீர் பேட்டி.!



Iraq wedding Fire Couple Ravan and Haneen Says Unexpected Sad Scene 

 

ஈராக் நாட்டில் உள்ள நினிவே மாகாணம், மோசூல் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேவன் (வயது 27) - ஹனீன் (வயது 19) தம்பதியின் திருமண நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 150க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி காணொளிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின. இந்நிலையில், இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய புதுமண தம்பதிகள், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர். 

அந்த பேட்டியில், "எங்களின் திருமணத்திற்கு பின் இவ்வாறான பெரிய சோகம் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. விழா நிகழ்ச்சி மேலாளர் மீது தவறு உள்ளது. 900 பேர் கூடியிருந்த மண்டபத்திற்கு மூன்று நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இருந்தன. இதனால் தீ விபத்தில் பலரும் வெளியேற முயற்சித்து அங்கேயே சிக்கிக்கொண்டனர். 

நான் சமையல் நடைபெற்று வரும் இடம் வழியாக, எனது மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறினேன். நிகழ்வின்போது நாங்கள் நடனமாடிக்கொண்டு இருந்தோம். மேல்புறம் தீப்பிடித்தது தெரியவந்ததும், உடனடியாக வெளியேறினோம். எனது மனைவி அப்போது மணப்பெண்ணுக்கான ஆடை அணிந்து இருந்தார். 

அவரின் ஆடையால் அவரும் மரணத்தை சந்தித்து வந்துள்ளார். இன்று வரை அவரால் அதிர்ச்சியில் இருந்து மீள இயலவில்லை. எனது குடும்பத்தைச் சார்ந்த பத்து பேரும், எனது மனைவியின் குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும் என நெருங்கிய சொந்தங்களை நாங்கள் இழந்துவிட்டோம். பலரும் படுகாயத்துடன் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்" என தெரிவித்தனர்.