கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: அதிர்ச்சி கொடுத்த அரசு..! நாடு முழுவதும் அமல்..!!



Netherlands Govt Announce Dec 19 to Jan 14 Strict Lockdown Imposed on Country

டிச. 19 ஆம் தேதியான இன்று முதல் ஜனவரி 14 வரை கடும் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதாக நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது. 

உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது. தற்போது வரை 89 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அது பரவியுள்ளதால், பல நாடுகள் தன்னாட்டு மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா வைரஸால் நெதர்லாந்து நாடு கடந்த காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இன்று வரை அங்கு மொத்தமாக 2,966,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,420 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உருமாறிய ஒமிக்ரான் அச்சமும் அங்கு அதிகரித்துள்ளது. 

Netherland

சனிக்கிழமையான நேற்று அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "உருமாறிய கொரோனாவான ஓமிக்ரானை எதிர்கொள்ள நாம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போது செய்யாவிடில், பெரும் பாதிப்பு ஏற்படும். மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிக்க முடியாமல், முந்தைய கால சோகம் நிகழும்.

அதனால், ஞாயிற்றுக்கிழமை டிச. 19 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசியம் இல்லாத கடைகள், உணவகம், பார், சினிமா, அருங்காட்சியமாக போன்றவை ஜனவரி 14 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. பள்ளிகள் ஜனவரி 9 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். 

Netherland

அத்தியாவசியமான கடைகள், பல்பொருள் அங்காடி, மருந்தகத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடும் வீட்டினர், தங்களது விருந்தாளிகள் 2 பேரை மட்டுமே கலந்துகொள்ள வைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும். பொதுவெளிகளில் 2 நபர்கள் மட்டுமே ஒன்றாக செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.