பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பு.. அதிகாரத்தை கைப்பற்றுகிறதா இராணுவம்?.. நடக்கப்போவது என்ன?..!
பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்றவற்றிற்கு பிரதமர் இம்ரான் கானின் அரசே காரணம் என்று கூறி, அவரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் செயலாற்றி வருகிறது.
நேற்று முன்தினத்தின் போது பாகிஸ்தான் பாராளுமன்றம் கூடிய சில நிமிடத்திலேயே சபாநாயகர் அவை நடவடிக்கை அனைத்தையும் ஒத்தி வைத்ததால், எதிர்க்கட்சிகளின் முயற்சி தற்காலிக தோல்வியை சந்தித்தது. மேலும், பாராளுமன்றம் திங்கள்கிழமை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், அன்றைய நாளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிக்க அவரின் சொந்த கட்சி உறுப்பினர்களே தயாராக இருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த 50 அமைச்சர்கள் பொதுவெளியில் தென்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற விபரம் இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் அவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்தை பொறுத்தமட்டில், நாங்கள் அரசியலில் தலையிடப்போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் எதோ ஒரு சூழ்நிலையால் இம்ரான் கானின் பதவி கேள்விக்குறியாகி, நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இராணுவம் அரசியலில் நாங்கள் தலையிடப்போவதில்லை என்று கூறியுள்ளதால், அரசியல் பிரச்சனை வன்முறையாக மாறும்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.