2 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி: மொராக்கோவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..!!
மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சிறிய நாடு மொராக்கோ. இங்கு நேற்று முன்தினம் இரவு 11:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவானது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் மொராக்கோ நாட்டிலுள்ள சுற்றுலா நகரமான மராகேஷ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்து தரைமட்டம் ஆனது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வினை உணர்ந்தவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை உணராமல் தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.