விவேக் மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்குமே பேரிழப்பு.! கடும் சோகத்தில் டிடிவி தினகரன்.!



ttv-dhinakaran-talk-about-vivek

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக், இயக்குனர் பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அவரது சிறந்த நடிப்பால் பத்ம ஸ்ரீ, பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார்.

நடிகர் விவேக்கின் மறைவிற்கு  நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது. இந்நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து டிடிவி தினகரன் அவரது  ட்வீட்டர் பக்கத்தில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். திரு. விவேக் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.