21 குண்டுகள் முழங்க ஜனாதிபதியாக பதவியேற்கிறார் திரெளபதி முர்மு: விழாக்கோலம் பூண்ட தலைநகரம்..!



Droupadi Murmu takes office as President after 21 gunshots

இந்திய திருநாட்டின் 15 வது குடியரசு தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்கிறார். இன்று காலை 10.15 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். 

நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக திரெளபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று பதவி பிரமாணம் செய்து வைப்பார் . 21 குண்டுகள் முழங்க இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  பதவியேற்பு விழா முடிந்தவுடன் நாட்டு மக்களிடையே குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுவார் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், முப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் திரெளபதி முர்முவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.