தெலுங்கானாவில் பரபரப்பு.. உணவு டெலிவரிக்கு சென்ற ஸ்விக்கி ஊழியரை விரட்டிய நாய்.. பயத்தில் 3வது மாடியில் இருந்து குதித்து பலியான சம்பவம்..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் யூசுப்குட்டா பகுதியில் வசித்து வருபவர் முகமது ரிஸ்வான். இவர் கடந்த 3 வருடங்களாக ஸ்விக்கி டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் வசிக்கும் சோபனா என்பவருக்கு முகமது ரிஸ்வான் உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது உணவை டெலிவரி செய்வதற்காக ரிஸ்வான் வீட்டின் கதவை தட்டி உள்ளார். இதனையடுத்து கதவு திறக்கப்பட்ட நிலையில் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ஒன்று ரிஸ்வான் மீது திடீரென்று பாய்ந்து கடுமையாக தாக்கத் தொடங்கியது.
இந்நிலையில் நாயின் தாக்குதலை கண்டு அதிர்ந்து போன ரிஸ்வான் நாயிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அந்த நாயானது தொடர்ந்து ரிஸ்வானை துரத்தவே வேறு வழி இல்லாமல் தப்பிப்பதற்காக ரிஸ்வான் 3வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் ரிஸ்வானுக்கு படுகாயம் ஏற்பட்டு ஹைதராபாத் NIMS மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து ரிஸ்வானுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக ரிஸ்வான் உயிர் இழந்தார். இதனையடுத்து ரிஸ்வானின் பெற்றோர் அளித்து புகாரின் பேரில் நாயின் உரிமையாளரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.