ஜிம்மிற்க்கு செல்பவர்கள்.. இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.!
ஜிம்மிற்க்கு வொர்க் அவுட் செய்ய செல்லும் பலருக்கும், பல முக்கிய விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. அவை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பாக நம்முடைய இலக்கு எது என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். தசை வளர்ச்சி, எடை இழப்பு போன்றவற்றில் நமது இலக்கு எது என்பதை யோசித்து முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் என்ன மாதிரியான விஷயங்களை கடைப்பிடித்தால் நமது இலக்கை அடைய முடியும் என்பதை ஜிம் பயிற்சியாளருடன் ஆலோசித்து தெரிந்து கொள்ள வேண்டும். சரியான டயட் பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் இலக்குகளுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்கள் உடல் ஒத்துழைக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்வதும் மிக அவசியமானது.
ஒவ்வொரு பயிற்சியையும் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பயிற்றுவிக்க வேண்டும். குறிப்பாக கார்டியோ பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும். ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் போது அதில் உள்ள நுட்பத்தை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். காயங்களை தவிர்க்க வேண்டும் என்றால் சரியான நுட்பத்தை கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். பயிற்சியாளரின் உதவியைக் கொண்டு இதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஓய்வு எடுப்பதும் முக்கியம். தசைகள் வளர ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு அன்றாடம் இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இலக்குகளை அடைய முக்கியமாக கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாமல் நீர்ச்சத்து உடலில் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அதிக அளவிற்கு தண்ணீர் குடிப்பதுடன் தண்ணீர் அதிகம் உள்ள பழங்களை சாப்பிடலாம். உங்களை நீங்களே ஊக்குவித்து கொள்ள வேண்டும். உங்கள் முன்னேற்றத்தை அன்றாடம் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கலாம். முடிவுகள் உடனடியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு சற்று காலமாகும்.
எனவே உடனே முடிவுகளை எதிர்பார்த்து அது நடக்கவில்லை என்று சோர்வடைய கூடாது. உடலுக்கு ஓய்வு தேவை எனில் சற்று ஓய்வு எடுக்க வேண்டும். வரம்புகளை மீறி உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம். மிகவும் சீரியஸாக ஒர்க் அவுட் செய்வதை விட்டுவிட்டு பாடல் கேட்டு கொண்டு செய்வது போல வேடிக்கையாக, அதே நேரத்தில் உடற்பயிற்சியை என்ஜாய் செய்து செய்ய வேண்டும். பிடித்தமான உடற்பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளை கண்டறிந்து அவற்றை நாம் செய்யும்போது நமது மனதும், உடலும் உற்சாகத்துடன் இருக்கும். இதன் மூலம் அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதுடன் உங்கள் மன ஆரோக்கியமும் மேம்படும்.