கிளை சிறைகளை மூடுவதற்கு தயாராகும் தமிழ்நாடு அரசு?.. அண்ணாமலை பரபரப்பு கண்டனம்.!



BJP Tamilnadu Leader Annamalai on Sub Prison Close Plan by TN Govt 

 

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கிளைச்சிறைகளில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி இல்லாத 18 சிறைகளை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விசயத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிர்வாக அறிவை கேள்விகுரியதாக்கும் செயல்

அந்த பதிவில், "தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடிப்படை வசதிகளை மேம்படுத்தவோ, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிசெய்யவோ நடவடிக்கைகள் எடுக்காமல், கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, திமுகவின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது. 

இதையும் படிங்க: "திமுகவின் பி டீம் தான் அதிமுக..." பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!!

சிறைச்சாலைகளில் போதிய இடம் இல்லை

தமிழகத்தில், குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், சிறைச் சாலைகளில், கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, சிறைச்சாலைகளில் போதிய இடம் இல்லாமல், ஒரே அறையில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்து, மனித உரிமை மீறலும் நடந்து கொண்டிருக்கையில், இருக்கும் சிறைச்சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் மூட முடிவு செய்திருப்பது, இதர சிறைச்சாலைகள் மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும். 

அரசுக்கு கோரிக்கை

திமுக மூட முடிவெடுத்துள்ள கிளைச் சிறைகளில், நல்ல நிலையில் உள்ள சிறைகளும் உள்ளன என்று கூறப்படுகிறது. அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும், ஊழியர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்ட்டுள்ளது.


 

இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... லண்டன் செல்லும் அண்ணாமலை.!!பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்.?