காங்கிரஸ் கட்சியினர் இந்து மதத்திற்கும், ராமர் கோவிலுக்கும் எதிரானவர்கள்: அமித்ஷா பகீர் குற்றச்சாட்டு..!



Congress party is against Hinduism and Ram temple, Amit Shah accuses

விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறை விசாரணை என்ற காரணங்களை கூறி ராமர் கோவிலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராடுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் போராட்டம் நடத்தியது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சாதாரண உடையில் போராட்டம் நடத்தியுள்ளதை பலதடவை பார்த்துள்ளோம். ஆனால், நேற்று அவர்கள் கருப்பு உடை அணிந்து போராடியதற்கான காரணம், இந்த நாள் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்த நாள் ஆகும். 550 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ராமர் கோவில் விவகாரத்தை பிரதமர் மோடி அமைதியான முறையில் தீர்த்துவைத்தார். அதன் பிறகு ராமர் கோவில் கட்டுமான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

50  ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, ராமர் கோவில் பிரச்சினையை தீர்க்க ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. ராமர் கோவிலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாத காரணத்தால், மறைமுகமாக இப்படி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மற்றபடி, விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறை விசாரணை என்ற கோஷங்கள் மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் கூறியுள்ளார்.