அரசியல் ஆலோசகராக நியமித்த ஓ.பி.எஸ்; கட்சியைவிட்டே நீக்கிய ஈ.பி.எஸ்: பந்தாடப்பட்ட பண்ருட்டியார்..!



Edappadi Palaniswami has announced that Panrutti Ramachandran will be removed from all responsibilities including basic membership.

பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க அரசியல் ஆலோசகராக இன்று நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அவரை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமனம் செய்து வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியான 1 மணி நேரத்திற்குள் அவரை அடிப்படை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,திரு. பண்ருட்டி S. ராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.