35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
போலி பாலியல் விளம்பரத்தால் தடம்புரளும் "வாலிப அன்பர்களின் இல்லற வாழ்கை".. மின்னுவதெல்லாம் பொன்னல்ல..!
பாலியல் விளம்பரங்களில் போலியான வாக்குறுதியால் மக்களின் மனதை மாற்றி வியாபாரம் செய்யும் கும்பல் தொடர்பாக விழிப்புணர்வு தேவை என்பதை இன்றுள்ள நடப்புகள் உணர்த்துகின்றன.
பாலியல் விஷயங்கள் தொடர்பாக நம்மனத்துக்குள் பல்வேறு கேள்விகள் இருக்கும். பால் உறவுகள் குறித்து புரிதல் இல்லாத பலரும் அதற்கான வழியை ரகசியமாக தேடுகின்றனர். மேலும், பாலியல் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெறவும் இன்றளவும் தயக்கங்கள் இருக்கின்றன. இணையவழியில் வரும் பல்வேறு போலியான விளம்பரத்தை பார்த்து, அதில் சொல்லப்படும் பொருட்களை வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல இழப்பு மட்டும் ஏற்படுவது மட்டுமல்லாமல், பிற சிக்கல்களும் ஏற்படுகிறது. இதில், இயற்கை என்ற பெயரை போலியாக உபயோகம் செய்து பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன. வியாபார உக்திக்காக ஒருவர் கூறும் தகவலை உண்மையா? என்று ஆராயக்கூட இயலாமல் அதனை வாங்கி உபயோகம் செய்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக சித்த மருத்துவர் விக்ரம் குமார் தெரிவிக்கையில், "தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சிறார்கள் முதல் இளைஞர்கள் வரை ஒன்றும் அறியாத அல்லது புரியாத வயதிலேயே பல விஷயத்தை அரைகுறையாக தெரிந்துகொள்கின்றனர். இதனால் திருமணத்திற்கு முன்னதாகவே பாலுறவு, ஓரினசேர்க்கை, சுய இன்பம், ஆபாச படங்கள் எனப்படும் போர்னோ படங்கள், குழந்தைகளை தங்களின் காம இச்சைக்கு பயன்படுத்துதல் என இருந்து வருகின்றனர். முறையான வழிகாட்டல் இல்லாத இளைஞர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் சிறுவயதில் சட்டப்படியான குற்றச்செயல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றங்கள் நடைபெறும் போது அதனை விவாதித்துவிட்டு, பிற நேரங்களில் நாம் அமைதியாக இருக்கிறோம். பாலியல் பிரச்சனை தொடர்பாக பேசி தீர்வுகள் காண வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு விட்டது. அதற்கான வெட்கம், பயத்தை நாம் உடைத்தாக வேண்டும். போலி விளம்பரங்கள் மற்றும் போலி பாலியல் மருத்துவர்களின் உரைகளால் ஏமாறாமல் இருக்க வேண்டும். பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காமம் தொடர்பான தவறான புரிதலை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளே இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சிகள் காமத்தினை விற்பனைப்பொருளாக்கும் விதத்தில் மட்டுமே சித்தரிக்கப்டுகிரியாது. இன்றுள்ள இளைஞர்களுக்கு மனதளவில் உள்ள பலவீனத்தை வியாபார யுக்தியாக உபயோகம் செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசும் மருத்துவரின் பேச்சினை தெய்வவாக்காக நினைத்து செயல்படுகின்றனர். அதற்கு ஏற்றாற்போல மருத்துவர்களும் பயங்களை அவர்களை இளைஞர்களின் மனதில் திணிக்கின்றனர். இதனை பேருந்து நிலையம், தெருவோரம், செய்தித்தாள் எனவும் விளம்பரம் செய்து வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடிகர் ஜெய் பாலியல் மருத்துவராக நடித்திருப்பார். தனது பொருட்களை விற்பனை செய்ய பயத்துடன் சுய இன்பம் கூட செய்யாத இளைஞரிடம் உனக்கு குழந்தை பிறந்து, கைகளில் ரேகை இல்லை என்று பயத்தை ஏற்படுத்தி தனது பொருளை வாங்க வைப்பார். இதைவிட சிறந்த உதாரணம் போலி பாலியல் மருத்துவ விளம்பரம் குறித்து கூற இயலாது.
இவ்வாறான மோசடி நபர்களை திருமணம் செய்தவர்கள், அதற்கு பிந்தைய சிறிய பாலியல் குறைபாடுகள் உள்ளவர்கள் சென்று ஏமாறுகின்றனர். அவர்களிடம் சிறிய பிரச்சனையை பெரியளவில் சொல்லி மன அழுத்தத்திற்கும் உள்ளாக்குகின்றனர். இவர்களே தனக்குத்தானே செக்ஸ் மருத்துவர் என்று பெயரையும் சுட்டு விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். ஆண்மை குறைபாடுகள் உட்பட அனைத்து பிரச்சனையையும் தங்களால் தீர்க்க இயலும் என்று விளம்பரம் செய்து பணத்தை கறக்கின்றனர். இவர்களை நம்பி பணத்தையும், மன தைரியத்தையும் இழக்க கூடாது.
பாலியல் பிரச்சனையில் 90 % மனம் சார்ந்த தொந்தரவால் ஏற்படும். மீதமுள்ள 10 % க்கு சிகிச்சை பெற்றால் போதுமானது. உடல் ரீதியாக உள்ள பிரச்சனை கூட பாலியல் குறைபாட்டிற்கு காரணமாக அமையலாம். ஆணுறுப்பு வீரியமில்லாதது, விந்து விரைவில் வெளியேறுதல், விந்தணுவின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைதல் போன்றவற்றுக்கு தகுதியுள்ள மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றாலே பாலியல் குறைபாடை சரி செய்யலாம். உடல் ரீதியாக பிரச்சனை இருக்கும் பட்சத்தில், அதனை அறிந்து கூறுவதே மருத்துவரின் கடமை ஆகும். குத்துமதிப்பாக மருந்துகள் பரிந்துரை கூடாது. காதல், காமம் அடச்சீ என்ற அளவில் இருப்பதை பல போலிகள் உபயோகம் செய்துகொள்கிறார்கள்.
குழந்தைகள் இல்லாமல் தவிக்கும் பெண்களை சமுதாயம் பலவிதமாக வசைபாடுகிறது. இதனை வைத்து வணிகம் செய்யும் ஆசாமிகள் அதிகளவில் இருக்கிறார்கள். இன்றளவில் பாலியல் கல்வி என்பது அவசியமாகியுள்ளது. அது குறித்த விழிப்புணர்வு இல்லாததே ஒவ்வொரு பாலியல் குற்றத்தையும் நிகழ்த்துகிறது. பாலியல் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவத்தில் பல்வேறு சிறந்த சிகிச்சைகள் உள்ளன. அதிகளவில் பணம் செலவழித்து விளம்பரம் செய்பவர்களை நம்ப வேண்டாம். பாலியல் குறைபாடுகள் என்பது இலட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் செலவழித்து நிவர்த்தி செய்யும் வியாதிகள் இல்லை. கணவன் - மனைவி அன்பு பரிமாற்றத்தில் மனத்தடை இல்லாமல் இருக்க வேண்டும்.
பாரம்பரியமான உணவு முறைகள், உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி போன்றவையே ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு வழிவகை செய்யும். அதனைப்போல, பாலியல் தொடர்பான விளம்பரத்தில் பாலியல் இயலாமை, பாலியல் திறனை மேம்படுத்தும் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. அதனால் மக்கள் பணம் செலவழித்து ஏமாற்றம் அடைகின்றனர். இதனை தடுக்க கடந்த 1954 ஆம் வருடமே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் வாயிலாக 54 வகை நோய்சிகிச்சை விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் 45 ஆவது இலக்கத்தில் பாலியல் இயலாமை விளம்பரங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இன்றளவில் "வாலிப வயோதிக அன்பர்களே" என்ற பெயரில் சாதாரண விஷயத்தை பெரியதாக காண்பித்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். அரசால் தடை விதிக்கப்பட்ட விளம்பரங்கள் சர்வ சாதாரணமாக தொலைக்காட்சி முதல் சுவரொட்டி வரை பதிவு செய்யப்படுகிறது.
அதனைப்போல, எங்களின் சிகிச்சையில் உடல் பருமன் குறையும், உடல் உயரம் அதிகரிக்கும், பாலியல் இன்பத்திறன் அதிகரிக்கும், பாலியல் உணர்வு அதிகரிக்கும், மலட்டுத்தன்மை சரியாகும் என்ற விளம்பரங்கள் அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்டவை ஆகும். ஒருவருக்கு பிரச்சனை என்றால், அதற்கான மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம் தவிர்த்து, தனியார் நிறுவனங்கள் அத்தகைய பொருட்களை அனுமதியின்றி விற்பனை செய்வது, விளம்பரம் செய்வது குற்றமாகும்.