ஐபிஎல் தொடரில் மீண்டும் 10 அணிகள்! களத்தில் குதிக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள்
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடர்களில் 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மட்டுமே 10 அணிகள் கலந்து கொண்டன. மற்ற ஆண்டுகளில் 8 அணிகள் மட்டுமே தொடர்ந்து ஆடி வருகிறது. இதற்கு காரணம் இடையில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள். குறிப்பாக கொச்சி அணியின் காரணமாக ஐபிஎல் நிர்வாகத்திற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் மீண்டும் 2021 ஆம் ஆண்டிலிருந்து 8 அணியிலிருந்து 10 அணிகளாக கலந்து கொள்ள ஆலோசனை செய்யப்படுவதாக பிசிசிஐ மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தப் புதிய அணிகளின் உரிமையாளர்கள் ஆக டாட்டா, அதானி மற்றும் RPG குழுமங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கலந்து கொள்ளும் ஜாம்ஷெட்பூர் அணிக்கு டாட்டா குழுமம் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். தற்பொழுது அவர்களது கவனம் ஐபிஎல் தொடரின் மீதும் விழுந்துள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிசிசிஐ தலைவர் தலைமையில் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றுள்ளது. அதில் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனவே 2021 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு புதிய அணிகள் உருவாக்கப்படும் நிலையில் டாட்டா குழுமம் ஜார்கண்ட் மையமாக வைத்து ஒரு அணியையும் அதானி குழுமம் அகமதாபாத்தை மையமாக வைத்து ஒரு அணியையும் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. மேலும் RPG நிறுவனம் ஏற்கனவே உரிமையாளராக இருந்து வந்த புனே அணியை மீண்டும் உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றுகிறது. அந்த இரண்டு நிறுவனங்கள் எவை எவை என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.