பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அதிரடி காட்டிய இந்திய அணி!, பணிந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்: தொடரை வென்று சாதனை..!
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
டி-20 தொடரில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இந்த தொடரின் 4 வது டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை தொடங்கினார். தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டை சுழற்றிய ரோஹித் சர்மா 16 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் வந்த தீபக் ஹீடா 21, ரிஷப் பண்ட் 44, சஞ்சு சாம்சன் 30 மற்றும் இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய அக்ஸர் படேல் 20 ஆகியோரது பங்களிப்புடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 191 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப், ஓபெட் மெக்காய் தலா 2 விக்கெட்டுகளும், அகெல் ஹீசைன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆட்டத்தை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் முதலே சரிவு ஏற்பட்டது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணிஆட்டமிழந்தது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 வது மற்றும் கடைசி டி-20 போட்டி இதே மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது.