ஐசிசி விதிமுறைகளை மீறுகிறாரா தோனி! என்னதான் சொல்கிறது ஐசிசி விதிமுறை?



is-dhoni-following-icc-rules

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி தனது கீப்பர் க்ளவுஸில் பொறித்திருக்கும் இந்திய பாராமிலிட்டரி முத்திரையை ஐசிசி விதிமுறை அனுமதிக்கிறதா என்றால் இல்லை என்பது போல தான் தோன்றுகிறது.

தென்னாப்பிரிக்கா உடனான முதல் உலகக்கோப்பை போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் போட்டியின் போது தோனி தன்னுடைய கீப்பிங் கிளவுஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் 'பாலிதான்' என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்.

MS Dhoni

அடுத்த போட்டியில் களமிறங்கும் போது தோனி அந்த முதீதிரையை நீக்கிவிட வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC), இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு(BCCI) கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ, தோனி அந்த முத்திரையை க்ளவுஸில் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் ஐசிசி விதிமுறை புத்தகத்தில், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் உடை மற்றும் உபகரணங்களில், ஒரு நாட்டின் சின்னம், விளம்பர சின்னம், ஒரு நிகழ்வை குறிக்கும் சின்னம், தயாரிப்பாளரின் சின்னம், பேட்டின் சின்னம், தொண்டு நிறுவனத்தின் சின்னம் போன்றவைகளை தவிர மற்ற சின்னங்களை பயன்படுத்த கூடாது என எழுதப்பட்டுள்ளது.

MS Dhoni

இதனை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, தோனிக்கு அடுத்த போட்டியில் அந்த ராணுவ முத்திரை பொறித்த கீப்பிங் க்ளவுஸை அணிந்து தோனி விளையாட அனுமதி அளிக்காது போன்றே தெரிகிறது. எனினும், கடந்த 2011ம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணன்ட் பதவி வழங்கப்பட்டு, 2015ம் ஆண்டு தோனி பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சியும் எடுத்துக் கொண்டார் என்பதால் அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது.

தோனியின் நாட்டுப்பற்றை ஐசிசி நிச்சயம் அங்கீகரித்து தோனி அந்த க்ளவுஸை அணிந்து விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். ஐசிசி என்ன முடிவினை எடுக்கிறது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MS Dhoni

2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் மொயின் அலி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு பேண்டினை அணிந்து விளையாட ஐசிசி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்திய அணி ஐசிசியிடம் முறையாக அனுமதி பெற்று ராணுவ தொப்பியினை அணிந்து விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.