காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்; சிறுமி எரித்துக் கொலை!.. தொடரும் பதற்றம்!.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!



144 Prohibitory Order Issued due to a young girl murder

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா நகரத்தை சேர்ந்தவர் அங்கிதா குமாரி. 16 வயது சிறுமியான இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அங்கிதா குமாரி வசித்து வந்த அதேபகுதியை சேர்ந்தவர் முகமது ஷாருக் ஹசன். இளைஞரான இவர் தன்னை காதலிக்குமாறு அங்கிதாவை பல நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், அங்கிதாவின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்ட ஷாருக், தன்னிடம் பேசுமாறும், தன்னை காதலிக்குமாறும் சிறுமி அங்கிதாவுக்கு தொல்லை கொடுத்துள்ளார். அங்கிதா சிறுவயதில் இருந்தபோதே அவரது தாயார் உயிரிழந்துவிட்டார். இதன் காரணமாக, ஷாருக் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக கடந்த மாதம் 22 ஆம் தேதி இரவு அங்கிதா தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஷாருக்கின் குடும்பத்தாரிடம் மறுநாள் பேசுவதாக  அங்கிதாவின் தந்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில், அன்று இரவு சாப்பிட்ட அங்கிதா தனது தனது அறையில் உறங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவு னேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்த ஷாருக் ஜன்னல் வழியாக அங்கிதா உறங்கிக்கொண்டிருந்த படுக்கை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். படுக்கையில் பரவிய தீ அங்கிதா மீதும் பிடித்தது. உறங்கிக்கொண்டிருந்த அங்கிதா தன் உடல் தீயில் எரிவதை உணர்ந்து விழித்து, அலறியுள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்ட அங்கிதாவின் தந்தை அறைக்கு ஓடி வந்து பார்த்துள்ளார். அங்கு தனது மகள் அங்கிதா தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் பின்னர், போர்வையை கொண்டு அவரது உடலில் பரவிய தீயை அணைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அங்கிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன் தினம் அங்கிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மரண வாக்குமூலத்தில், காதலிக்க மறுத்ததால் ஷாருக் ஹசன் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக அங்கிதா தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஷாருக் ஹசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரது கூட்டாளியான நயீம் கான் என்ற நபரையும் கைது செய்தனர். உயிரிழந்த அங்கிதாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மதரீதியிலான மோதலை ஏற்படுத்த கூடும் என்பதால் தும்கா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.