வேலையில்லா பட்டதாரிகளை குறிவைத்து பல லட்சம் மோசடி செய்த தம்பதியினர் அதிரடி கைது..!
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள பெருவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி சகாயவிண்ணரசி (எ) விண்ணரசி. இவர்கள் இருவரின் மீது கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரியான ஜெயமாதவசாரதி என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம் பெருவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி விண்ணரசி என்பவர்கள் அவரது நண்பர் மூலம் அறிமுகமாகியுள்ளனர். விண்ணரசி அரியலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகள் என நிறைய அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என்றும் அவர்கள் மூலமாக உங்களுக்கு அரசு வேலை வாங்கிகொடுக்கிறேன் என்று ஆசைகாட்டி உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு பணியில், அசிஸ்டன்ட் டைரக்டர் பணியிடம் காலியிடமாக இருப்பதாகவும் அந்த பதவிக்கு பணி அமர்த்த இருப்பதாகவும் 11 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி கொடுத்து விடுவேன் என்று ஆசை காட்டி நம்ப வைத்துள்ளனர். அதனை நம்பி ரூ. 11 லட்சத்தை ஜெயமாதவசாரதி அந்த தம்பதியினரிடம் கொடுத்துள்ளார்.
11 லட்சத்தை பெற்றுக் கொண்ட சுதாகரன் மற்றும் அவரது மனைவி சகாய விண்ணரசி ஆகிய இருவரும் சொன்னபடி எந்த வேலையும் வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பின்னர் பணத்தை திரும்பி கேட்டதால் 1 லட்சத்தை மட்டுமே திரும்பிக் கொடுத்துவிட்டு ரூபாய் 10 லட்சத்திற்கு காசோலை வழங்கி ஏமாற்றியுள்ளனர்.
மேலும் சிதம்பரம் அருகேயுள்ள கொடிப்பள்ளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் திருமுருகன் என்பவரிடம் Army Canteen ல் கண்காணிப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 7 லட்சமும், சிதம்பரம் நற்கவந்தான்குடியைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று லட்சமும். சிதம்பரம் கீழமூங்கிலடியைச் சேர்ந்த சிவனேசன் மகன் சிவகுருநாதன் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும், குறிஞ்சிப்பாடி தாலுகா மீனாட்சிபேட்டையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு WELFER DEPARTMENT ல் Assistant director வேலை வாங்கி தருவதாக ரூபாய் 20 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ. 40 லட்சத்திற்கு மேல் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுதாகரும் விண்ணரசியும் திட்டமிட்டு சிதம்பரம் மற்றும் சேத்தியாதோப்பு பகுதியைச்சேர்ந்த நபர்களிடம் தான் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டருக்கு நேர்முக உதவியாளராக இருப்பதாகவும், சப் கலெக்டர் ஆக பணி புரிவதாகவும் சொல்லி வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றியும் அவ்வப்போது வீடுகளை மாற்றி வடலூர், சிதம்பரம் பகுதிகளில் மாறி மாறி குடியிருந்துகொண்டு ஏமாற்றிய பணத்தில் மேற்படி ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், சிதம்பரம் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.