ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் டீமின் அதிரடி வேட்டை! ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை!
37 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலின் கருவறையின் இரும்புக்கதவை உடைத்து நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகர் மற்றும் ஸ்ரீபலிநாதர் உள்ளிட்ட ஐம்பொன்னாலான நான்கு சிலைகள் கடந்த 1982 ஏப்ரல் மாதம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தச் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என நெல்லை காவல்துறை 1984ஆம் ஆண்டு வழக்கை மூடியதாகவும், 35 வருடத்திற்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலின் குழுவினர் கோவிலை ஆராய்ந்தனர். அதன் பிறகு விசாரணை மேற்கொண்டனர்.
ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளை போன சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய அரசு உதவியுடன் இந்தச் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லி கொண்டுவரப்பட்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலை. பின்னர் டெல்லியிலிருந்து ரயிலின் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தது. மீட்கப்பட்ட நடராஜர் சிலை மட்டும் 30 கோடி மதிப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.