தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா.? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட தகவல்.!



Anbil Mahesh poyamozhi talk about 12'th exam

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. 

கொரோனாவால் 2020 -2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வும் ரத்துசெய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். இதனையடுத்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து அறிவித்து வருகின்றன. 

இந்தநிலையில், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இந்தநிலையில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்காமல் உள்ளன.

anbil mahesh

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளாட்களிடம் பேசிய அவர், 12 ஆம் வகுப்பு தேர்வு பற்றி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று (05-06-2021) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.